நாம் அடிக்கடிக் கேள்விப்பட்ட ஒரு வசனம் : இதுவொன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல!
ஆனால் சிலவேளை சிலவிடயங்கள் ராக்கெட் விஞ்ஞானமாக அமைந்துவிடுகிறது. அறிவியலின் இந்தப்பிரிவு மிகவும் சிக்கலானதும், அபாயகரமானதுமாகும். ஆனாலும் அவற்றால் எமக்கு பெரிய வெகுமதிகள் கிடைக்கும்.
PROCYON என்னும் சிறிய செய்மதி விண்ணுக்கு 2014 இல் ஏவப்பட்டது. PROCYON (ப்ரோசையோன் என உச்சரிக்கப்படும்) என்கிற செய்மதி சிறுகோளிற்கு அருகில் சென்று அதனைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதனது உந்தியில் ஏற்பட்ட கோளாறினால் விண்ணில் தொலைந்துபோனது. சிறுகோளை நோக்கி பயணிக்க முடியாததால், அதற்கு பதிலீடாக சூரியனைப் பற்றி ஆய்வுசெய்வதர்காக அது பணிக்கப்பட்டது.
2015, செப்டெம்பர் மாதத்தில் ரோஸெட்டா விண்கலம் 67P/Churyumov-Gerasimenko என்கிற வால்வெள்ளிக்கு அருகாமையில் பயணித்து. அந்தக் காலப்பகுதி ரோஸெட்டா திட்டத்தின் கடைசி சில வாரங்களாகும். மேலும் அந்தக் காலப்பகுதியில் ரோஸெட்டா விண்கலமும் சூரியனுக்கு அருகாமையில் பயணித்தது.
“அழுக்கான பனிக்கட்டிகள்” என பொதுவாக அறியப்பட்ட இந்த வால்வெள்ளிகள் பெரும்பாலும் பனியாலும் தூசுகளாலும் ஆனவை. இவை சூரியனுக்கு அருகாமையில் பயணிக்கும் போது சூரியனது வெப்பம் காரணமாக பனி உருகி ஆவியாகும். இதுவே வால்வெள்ளியின் “வால்” ஆகும். மேலும் வெப்பத்தின் காரணமாக, வால்வெள்ளியை சுற்றி மூடுபனி போன்ற ஒரு அமைப்பு உருவாகும், இதனை கோமா (coma) என அழைக்கின்றனர்.
ரோஸெட்டா விண்கலம் தனது கடைசிக்காலத்தில் இந்தக் கோமா பகுதியினுள் இருந்த காரணத்தினால், கோமாவின் அளவு மற்றும் அதன் வடிவம் எப்படி மாறுபடுகிறது என்று அதனால் ஆய்வு செய்யமுடியவில்லை. மேலும் பூமிக்கு மிக அருகில் இந்த வால்வெள்ளி வந்தபோது, பூமியில் இருந்து அதனை அவதானிப்பதற்கான காலநிலையும் காணப்படவில்லை. அதனால் பூமியில் இருக்கும் தொலைநோக்கிகளால் குறித்த வால்வெள்ளியின் கோமாவை அவதானிக்கமுடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக PROCYON உதவிக்கு வந்தது. விண்ணில் இருந்துகொண்டு வால்வெள்ளியின் கோமாவைப் பற்றி தகவல்களை சேகரித்து எமக்கு அனுப்பியது. இந்தத் தகவல்களின் மூலம், வால்வெள்ளியின் ஆக்கக்கூறுகள் பற்றியும், சூரியனது வெப்பத்தினால் எவ்வளவு நீரை அது இழக்கிறது என்பது பற்றியும் எமக்குத் தெரியவந்தது.
பூமிக்கு நீர், இப்படியான வால்வெள்ளிகளின் மோதல்கள் மூலம் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. 67P என்னும் வால்வெள்ளியை ஆய்வுசெய்வதன் மூலம் எமக்கு இது எந்தளவு உண்மை என்று தெரியும்.
ஆர்வக்குறிப்பு
PROCYON நுண்ணிய செய்மதி என அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இதன் அளவாகும். வீட்டில் இருக்கும் மைரோவேவ் அவனைவிட சற்றே பெரிய PROCYON துணிதுவைக்கும் இயந்திரத்தின் எடையைக் கொண்டது. விண்வெளியில் இப்படியான சிறிய மற்றும் விலைமதிப்புக் குறைந்த செய்மதியைப் பயன்படுத்தி அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
Share: